• Mon. Dec 23rd, 2024

ஹிஜாப் பிரச்சனை : பிற நாடுகள் தலையிட வேண்டாம்

Feb 12, 2022

ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து வேறு சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து கர்நாடகாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் வழக்கு தொடர்பாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.

இந்தநிலையில் கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சைக்கு பதிலளித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் (ஐஆர்எஃப்) கர்நாடக ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துகிறது, ஒதுக்கி வைப்பதாகவும் இருக்கிறது என்று நேற்று தெரிவித்தது.

ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது ட்விட்டர் பதிவில் ” மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுக்க்கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக்கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது” என தெரிவித்து இருந்தார். இதுபோலவே பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் கருத்து தெரிவித்து இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என இந்திய மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸ இதுகுறித்து கூறுகையில் ”கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் முன்வந்துள்ள ஹிஜாப் பிரச்சனை குறித்து பெங்களூரு உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பிற நாடுகள் இது போன்ற இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டாம். எங்கள் அரசியலமைப்பு, வழிமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அந்த உண்மைகளை உரியமுறையில் பாராட்டுவர்” எனக் கூறியுள்ளார்.