• Tue. Dec 10th, 2024

உலகின் மிக பயங்கரமான ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா மீது பொருளாதாரத் தடை

Mar 26, 2022

உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தற்காக வடகொரியா நாட்டின் நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இருப்பினும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற நோக்கிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் நோக்கிலும் வட கொரியா அடிக்கடி ஏவுகணைகளை வருகிறது. இது தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், ‘ஹவாசங்-17’ (Hwasong-15,) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. அந்த ஏவுகணை அதிகபட்சமாக 6,248 கி.மீ. உயரம் வரை பறந்து 1,090 கி.மீ. தொலைவைக் கடந்து கடலில் விழுந்ததாக வட கொரியாவின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது அதிநவீனத்துவம் கொண்டதாக அறியப்படுகிறது. அதன் மூலமாக அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் வட கொரியாவால் தாக்க முடியும்.

வட கொரியாவின் அணு ஆயுதத் திறனை உலகுக்கு எடுத்துரைக்கவே ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்டு ஆஸ்டின், ஜப்பான், தென் கொரியா நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா். 3 நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அவா்கள் உறுதியேற்றனா்.

வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய 5 நிறுவனங்கள், தனிநபா்கள் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

2022-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மட்டும் வட கொரியா 12 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.