நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்திருந்தார்..
அதோடு நடிகர் ஆர்யாவின் புதிய படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக 71 லட்சம் ரூபாயை வெஸ்டர்ன்யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு தனது பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக
தன்னிடம் ஆர்யா பணம் பெற்றதற்கு ஆதாரமான பணபரிவர்த்தனை ஆவணங்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆர்யா வாட்ஸ்அப்பில் வாக்குறுதி அளித்த சாட்டிங் விவரங்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பில் சென்னை பொலிசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்தவாறே, சென்னை மெஜஸ்டிக் லா பார்ம் வழக்கறிஞர் ஆனந்தன் மூலமாக , ராஜபாண்டியன் என்பவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை வித்ஜா தாக்கல் செய்தார் .
அதில் ஆர்யா தன்னிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை, அவர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை, மலையாளப்படமான ரெண்டகம், ஒட்டு மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களுக்கு பயன்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார். எனவே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பொலிசார் முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜாவின் புகார் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஈழத்தமிழ்ப்பெண் வித்ஜாவின் புகாரை சில அழுத்தம் காரணமாக சிபிசிஐடி காவல்துறையினர் கிடப்பில் போட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.
இதேவேளை ஈழத்தமிழ்ப்பெண்ணின் இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.