• Tue. Apr 16th, 2024

கடந்த ஆண்டு வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியல் இதோ

Jan 1, 2022

கடந்த ஆண்டு கொரானா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டது. அதன் பிறகு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது படங்களின் வருகையே. ஊரடங்கு முடிவு பெற்று திரையரங்குகளும் திறக்கப்பட்டது. இதன் வரிசையில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாஸ்டர்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பேசப்பட்டது. எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த இந்த திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. ஊரடங்கிற்கு பிறகு திரையரங்குகளில் வெளியான முதல் பெரிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சம் மறப்பதில்லை

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் மீது பெரிய எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் இது. ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட இந்த திரைப்படம் வருமான ரீதியாக அதிக வசூல் அள்ளவில்லை. இருப்பினும் இப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மார்ச் 5ஆம் தேதி வெளியானது.

சுல்தான்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுல்தான். ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது. கன்னட, தெலுங்கு படங்களுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்பதாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது.

மண்டேலா

யோகி பாபு, ஷீலா நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. குறும்பட இயக்குனர் மடோன் இயக்கிய இந்த திரைபடத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்பை உருவாக்கியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. சமூக கருத்தை வைத்து பேசப்பட்ட இந்தப்படம் நல்ல தாக்கத்தை உருவாக்கியது. ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது.

கர்ணன்

தனுஷ், ரஜிஷா விஜயன், லால் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பெரிய தாக்கத்தை உருவாக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. வி கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.

ஜகமே தந்திரம்

தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஐஷ்வர்யா லெ‌ஷ்மி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமாக இருக்கிறது. பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியானது.

சார்ப்பட்டா பரம்பரை

ஆர்யா, துசரா விஜயன், கலையரசன் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சார்ப்பட்டா பரம்பரை. மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி பெரும் சலசலப்பை உருவாக்கிய பா.ரஞ்சித் இந்த படத்தை அவருடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கினார். பல எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளியான இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குத்துசண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படம் ஜுலை 22 ஆம் தேதி வெளியானது.

ருத்ர தாண்டவம்

ரிச்சர்ட் ரிஷி, கவ்தம் வாசுதேவ், தர்ஷா நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ருத்ர தாண்டவம். திரெளபதி திரைப்படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் இயக்கிய இந்த படம், ஆரம்பத்திலிருந்து பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் உருவாக்கியது. ஜி.எம்.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியானது.

டாக்டர்

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகனன், வினய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கடித்த இயக்குனர் நெல்சனும் சிவாவும் இணைந்ததிலிருந்து இப்படம் பெரிய ஆர்வத்தை தூண்டியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வசூலை குவித்தது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

ஜெய்பீம்

சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஷ் நடிப்பில் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். சூர்யா நடித்த சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இது. இந்த படம் உருவாக்கிய தாக்கம் பெரிய விவாதத்தை உருவாக்கியது. 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்த இந்த படம் நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது.

அண்ணாத்த

ரஜினிகாந்த், நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. பெரும் பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியானது.

மாநாடு

சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாநாடு. பல தடங்களுக்கு பிறகு வெளிவருமா? வராதா? என்று கடைசி நிமிடம் வரை பரபரப்பை இப்படம் ஏற்படுத்தியது. புதுவித முயற்சியை கையாண்ட வெங்கட் பிரபுக்கு வெற்றி கிடைத்தது. வி ஹவுஸ் புரடெக்‌ஷன்ஸ் உருவாக்கிய இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.