• Tue. Sep 10th, 2024

நடிகர் சூர்யா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

Nov 16, 2021

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின.

இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.

ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.