• Sat. Oct 12th, 2024

ஒத்திவைக்கப்பட்ட வலிமை வெளியீடு

Jan 7, 2022

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக் குழு அறிவித்துள்ளது.

ஹெ. வினோத் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் பாடல்கள், கிளிம்ப்ஸ் விடியோ, டிரெய்லர் உள்ளிட்டவை வெளியாகின.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரிப்பால், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனால், ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், வலிமை படம் ஜனவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கி, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என படத் தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த 4-ம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியாகவிருந்த வலிமை திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படத் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.