• Mon. Dec 9th, 2024

மீண்டும் இணையும் ரஜினி – வடிவேலு?

Mar 3, 2022

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம்.

நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பெயர் அடிபடுகிறது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் புதிய படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி படத்தில் ரஜினி, வடிவேலு நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன. தற்போது மீண்டும் புதிய படத்தில் இவர்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.