• Thu. Oct 31st, 2024

தனுஷ் இடத்தில் சிவகார்த்திகேயன்?

Nov 29, 2021

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களை இயக்கிய ராம் குமார் அடுத்து தனுஷை இயக்கயிருந்த நிலையில், அவர் தனுஷுக்குப் பதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கலாம் என செய்திகள் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முண்டாசுப்பட்டி ரொமான்டிக் காமெடிப் படம். அதற்கு மாறாக இரண்டாவது படத்தை ஆக்ரோஷனமான த்ரில்லராக எடுத்து ஹிட்டடித்தவர் ராம் குமார்.

ராட்சசன் அளவுக்கு ரசிகர்களை மிரட்டிய த்ரில்லர் சமீபத்தில் இந்திய சினிமாவிலேயே வெளியாகவில்லை எனலாம். படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர்.

ராம் குமார் கால்ஷீட் கேட்டால் முன்னணி நடிகர்களே தரத் தயாராக இருக்கிறார்கள். அவர் தனுஷிடம் ஒரு கதையை கூறியிருந்தார்.

ராம் குமாரின் அடுத்த ஹீரோ தனுஷ் தான் என்று சொல்லப்பட்ட நிலையில், கதை அவருக்குப் பிடிக்காததால் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க ராம் குமார் திட்டமிட்டிருப்பதாக இன்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு உலவுகிறது.

சிவகார்த்திகேயன் டான் படத்தை முடித்துள்ளார். அயலான் படம் அண்டர்புரொடக்ஷனில் உள்ளது.

இதையடுத்து அனுதீப் இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்திலும், சிங்கப்பாதை தமிழ்ப் படத்திலும் நடிக்கிறார். அத்துடன் ராம் குமார் இயக்கத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தனுஷும் சிவகார்த்திகேயன் போலவே சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார்.

மாறன், திருச்சிற்றம்பலம் படங்கள் அவரது நடிப்பில் தயாராக உள்ளன. இந்திப் படம் அத்ரங்கி ரே டிசம்பர் 24 ஓடிடியில் வெளியாகிறது. ராம் குமார் இயக்கத்தில் அவரே நடிப்பார் என ஒருசாரார் உறுதிபட கூறுகின்றனர்.