• Mon. Sep 9th, 2024

‘வலிமை’ விமர்சனம்

Feb 24, 2022

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று மதுரையில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை கடத்துகிறார்கள்.

இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். ஒருநாள் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித்.

அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித்.

இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அஜித்.

குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் அஜித்.

வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத்.

பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது. கிரைம் திரில்லர் மட்டுமில்லாமல், அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து ரசிகர்களும் கவரும் விதத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ஆடவும், அம்மா பாடல் உருகவும் வைத்திருக்கிறது.

பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.