• Mon. Dec 2nd, 2024

இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி

Jan 20, 2022

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஊழியர்களின் அலட்சியத்தால் சில தவறுகளும், தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்ட முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராஜப்பா என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

அவருக்கு அதே ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நிலுவை தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நிலுவைத் தேதி வந்துள்ளதால், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அழைத்தனர்.

ஆனால் ராஜப்பா உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ராஜப்பாவுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் கடந்த 18ஆம் தேதி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாகவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதல் அனைத்தையும் அவரது குடும்பத்தினர் காட்டி வேதனை தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.