• Sun. Dec 8th, 2024

சிறுவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி!

Jan 3, 2022

கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி-16 லிருந்து தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பரவி வரும் உருமாறிய தொற்று காரணமாக 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இந்திய பிரதமர் மோடி உரையாற்றுகையில், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ஜனவரி-3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும்.

அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி-10ம் தேதிக்கு மேல் தொடங்கும். இந்த தடுப்பூசியானது முன்பை போலவே முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்படும்” என்று கூறினார்.

பிரதமரின் அறிவிப்புப்படி, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் நிலையில் இதற்கான பதிவு நேற்றைய தினமே தொடங்கிவிட்டது. இதுகுறித்து மத்திய சுகாதார மந்திரி மன்கக் மாண்டுவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக கோவின் தளத்தில் அதற்கான பதிவு தொடங்கியுள்ளது. இந்த வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 30 நிமிடங்களுக்கு கண்காணிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படுவர், அடுத்த டோஸ் 28 நாட்களுக்கு பின்னர் போடப்படும். இவர்களுக்கென்று தனியாக தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிவு செய்ய மொபைல், இணையதளம் போன்றவற்றில் கோவின் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு பதிவு செய்ய ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.