• Thu. Apr 25th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11

Aug 11, 2021

ஆகத்து 11 கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.

கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது.

355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.

1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.

1812 – இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர்.

1920 – லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

1945 – கிராக்கோவ் நகரில் போலந்து மக்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தினர்.

1952 – உசைன் பின் தலால் யோர்தானின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

1960 – சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசப் பகுதிகளான தாத்ரா, நகர் அவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.

1962 – வஸ்தோக் 3 விண்கலம் பைக்கனூரில் இருந்து ஏவப்பட்டது. அந்திரியன் நிக்கொலாயெவ் நுண்ணீர்ப்பு விசையில் மிதந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலசு நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968 – பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசிப் பயணிகள் சேவையை நடத்தியது.

1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டு வெளியேறினர்.

1975 – கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார்.

1979 – உக்ரைனில் இரண்டு ஏரோபுளொட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 178 பேரும் உயிரிழந்தனர்.

1982 – தோக்கியோவில் இருந்து ஒனலூலு நோக்கிச் சென்ற பான் ஆம் விமானத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 5 பேர் காயமடைந்தனர்.

1984 – தேர்தல் பரப்புரைக்காக வானொலி ஒன்றில் தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் “எனது சக அமெரிக்கர்களே, உருசியாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்” எனக் கூறினார்.

1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003 – ஆப்கானித்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ அமைப்பு அனுப்பியது.

2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 2009 இலேயே மீண்டும் திறக்கப்பட்டது.

2012 – கிழக்கு அசர்பைஜானில் தப்ரீசு நகருக்கருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 306 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயமடைந்தனர்.

2017 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.