சூன் 18 கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.
618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார்.
1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார்.
1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.
1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
1830 – பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.
1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
1887 – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.
1900 – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி ஆணை பிறப்பித்தார்.
1908 – சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
1948 – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1953 – ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
1972 – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
1979 – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1981 – கரவுத் தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1983 – பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1994 – வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
2006 – கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
2018 – சப்பான், வடக்கு ஒசாக்காவில் 5.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.