• Sun. Dec 8th, 2024

கோவை முதல் இலங்கைக்கு விமான சேவை!

Feb 22, 2022

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும், கொழும்பு, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இங்கு நாள்தோறும் 30 முதல் 35 விமானங்கள் வந்து செல்கிறது.

கொரோனா முதல் அலை காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான சேவை நடைபெற்றது. மேலும் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமான சேவை அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த மே மாதம் முதல் மற்ற விமானங்களும் இயக்கப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில், கோவை-கோவா இடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் நேரடி சேவை தொடங்கியது. சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொழும்பு விமான சேவை மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், அங்கும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இலங்கை விமான நிலையங்கள் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளன. இதுபற்றி இலங்கையின் விமான நிலைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை-இலங்கை இடையே விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 2- வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.