அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து அவரை கத்தியால் குத்தியது சி.சி.டி.வி காணொளி மூலம் தெரிய வந்தது.
அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட காங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவும் தெரிவித்தனர். தங்களது குழுவுக்கு ‘பட்னாம் கேங்’ என்று பெயரும் சூட்டியுள்ளனர்.
கொலை செய்வதற்காக ஜகாங்கீர்புரியில் ஷிபு என்பவரிடம் வேண்டுமென்றே சண்டைக்கு சென்றுள்ளனர். அதில் ஒரு சிறுவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க, மற்றொரு சிறுவன் அவரை பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள, மூன்றாவது சிறுவன் கத்தியால் அவரின் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.