• Fri. Mar 29th, 2024

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளவுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

Sep 28, 2021

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அத்துடன் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை பல்வேறு கட்டுப்பாடுகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

அதன்படி தமிழகத்திலும் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 30 ஆம் திகதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த ஊரடங்கை நீட்டிப்பு, கூடுதல் தொடர்புகள் வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கின் போது ஏற்கனவே விதிக்கப்பட்ட அனைத்து நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளும் அமலில் இருக்கும். மேலும் சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.