இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை உறுதி செய்யும் வகையில் டெல்லி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய எரிப்பொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கடந்த 15 ஆம் திகதி மெய் நிகர் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
மறுப்புறம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கடந்த டிசெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட டெல்லி விஜயத்தின் எதிர்பார்ப்புகளின் ஒன்றை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.