• Fri. Dec 6th, 2024

உக்ரைனில் காயம் அடைந்த மாணவர் மீட்பு; பெற்றோர் நன்றி

Mar 7, 2022

உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்தியர் ஹர்ஜோத் சிங் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை சாவடி பகுதியருகே துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார்.

அதில் பலத்த காயமடைந்த அவர், கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் மற்றும் வேதனையுடன் அவர் பேசிய வீடியோவும் வெளியானது.

உக்ரைனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய மந்திரி வி.கே. சிங் நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கீவ் நகரில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியரான ஹர்ஜோத் சிங் நாளை இந்தியாவுக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, போலந்து நாட்டின் ஜிரெஸ்ஜவ் நகரில் இருந்து டெல்லியில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்திய விமான படை விமானத்தில் ஹர்ஜோத் சிங் உள்ளிட்ட இந்தியர்கள் வந்தடைந்தனர்.

அவரது நிலை சீராக உள்ளது. ஆர்.ஆர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார் என மத்திய மந்திரி வி.கே. சிங் இன்று கூறியுள்ளார். சிங் மீட்கப்பட்ட செய்தியறிந்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

சிங்கின் தந்தை கூறும்போது, பிரதமர் மோடி, மத்திய வெளிவிவகார இணை மந்திரி மீனாட்சி லேகி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மகிழ்ச்சி அடைந்து உள்ளேன். எனது மகனை வரவேற்க டெல்லி செல்கிறேன் என கூறியுள்ளார்.

எங்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருந்ததற்காக இந்திய அரசு மற்றும் ஊடகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என சிங்கின் தாயார் பிரகாஷ் கவுர் தெரிவித்து உள்ளார்.