• Thu. Mar 28th, 2024

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை – அமைச்சர் கருத்தால் சர்ச்சை

Jul 20, 2021

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என இந்திய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

கடந்த மே மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், படுக்கை இல்லாமலும் நோயாளிகள் திண்டாடியதுடன் , ஆம்புலன்ஸ்களிலேயே நூற்றுக் கணக்கான நோயாளிகள் உயிரிழந்த கோரமான சம்பவங்களும் அங்கு அரங்கேறியது.

இந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்,

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

ஆக்சிஜன் சப்ளையை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து வழங்கியது. உயிரிழப்பை எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.

அதன் படி பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்ததாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. கடந்த மே மாதத்தில் எங்கு பார்த்தாலும் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற பேச்சுக்களே எழுந்திருந்தன.

அத்தகைய கோரமான நிலையில் இந்தியா தத்தளித்ததை உலகமே நன்கு அறியும். இத்தகைய சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.