• Sat. Mar 23rd, 2024

இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

Nov 26, 2021

இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.

தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

”ஏர் பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல் குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானசேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.