• Sat. Nov 23rd, 2024

சீருடையின் நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்!

Feb 15, 2022

இந்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் தங்கள் சீருடையின் கால் சட்டை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவது போல கர்நாடக அரசின் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று வாதிடப்பட்டது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பியைச் சேர்ந்த ஜூனியர் கல்லூரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு நேற்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராய் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மாணவிகள் தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

”கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று மாணவிகள் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிட்டார்.

கேந்திரிய வித்யாலயாக்களில் இஸ்லாமிய மற்றும் சீக்கிய மாணவிகள் முக்காடு அணிய அனுமதிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு விசாரணை இன்று(15) தொடர உள்ளது.