• Fri. Apr 19th, 2024

இந்தியாவில் 16 உயிர்களை பலி வாங்கிய விஷ சாராயம்!

Jul 17, 2021

பீகார் மாநிலத்தில் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்து வருவதுடன் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துவருகிறது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் லாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை பொதுமக்கள் வாங்கி குடித்துள்ளனர்.
சாராயம் குடித்த பின்னர் அவர்களில் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மதிய நிலவரப்படி உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஷத்தன்மை கொண்ட சாராயத்தை குடித்ததால் இறந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 5 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி துணை முதல் மந்திரி ரேணு தேவி கூறும்போது, ‘விசாரணை நடந்து வருகிறது. தொடர்புடைய அதிகாரிகள் அதற்காக பணியாற்றி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் எதுவும் பேச முன்வரவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம்’ என்றார்.

மேலும் சாராயம் குடித்து யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் மறைக்காமல் மருத்துவக் குழுவிடம் தெரிவிக்கும்படி, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட பொலிஸ் சூப்பிரெண்டு ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.