தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடை பராமரிப்புத்துறை தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
”கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர், மாநில அளவில் ஜல்லிக்கட்டு மேற்பார்வைக்குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட வேண்டும். மாவட்ட நிர்வாகம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
உதவி கலெக்டர் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த போதுமான இடவசதி உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும்.
காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை உள்நாட்டின காளைகள் (நாட்டு மாடுகள்) என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் சோர்வாக, நிதானமின்றி உள்ள காளைகளை அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக காளைகளுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதுபோன்ற காளைகளை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். கால்நடை அவசர மருத்துவ ஊர்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய வேண்டும். மது போதையில் இருப்பவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து பார்வையாளர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கும் இடையே 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா மூலம் விதிமீறல்கள், விலங்குகள் துன்புறுத்தல்கள் நடக்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முறையாக விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற்று உரிய அரசுத்துறைகளுடன் ஒத்துழைத்து மேற்கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மேற்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.