
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று(03) காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் .
இந்நிலையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது .
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்துக்கு அனுமதிக்க கோரி அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார் . ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுவிருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது .
இது குறித்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முக்கிய கோயில்களில் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று பொது விருந்து நிகழ்வினை அனுமதிப்பது குறித்து தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது .
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுவிருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
அதே நேரத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.