நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் ஆளுநரின் செயலை விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆளுநரை திரும்ப பெற கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.
தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நீட் விலக்கு மசோதாவை 5 மாதங்கள் காலதாமதம் செய்து ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாகவும், மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றார்.
இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.