• Mon. Dec 9th, 2024

தமிழ்நாட்டில் ஆரம்பமானது வாக்களிப்பு!

Feb 19, 2022

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது (காலை 7 மணி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுள்ளன.

இந்த தேர்தலில் சுமார் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதர வாக்காளர்கள் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து விட வேண்டும் என வாக்காளர்களை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.