
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில், தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிரடியாக உயா்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,856 உயா்ந்து, ரூ.39,608 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷ்யா – உக்ரைன் போா் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பெப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, விலை சற்று குறைந்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா வியாழக்கிழமை போா் தொடுத்ததால், ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,856 உயா்ந்து, ரூ.39,608 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.232 உயா்ந்து, ரூ.4,951 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயா்ந்து, ரூ.72.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 உயா்ந்து, ரூ.72,700 ஆகவும் இருந்தது.
உக்ரைன் – ரஷ்யா போா் காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்ற அச்சத்தில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனா்.
இதன் காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து வருகிறது. சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயா்வு இந்திய சந்தையில் எதிரொலித்து. இதன்காரணாக, தங்கத்தின் விலை உயா்ந்துள்ளது.