கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேலும் 106 போருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (ஜன-24) மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், நேற்றைய தினம் (ஜன-25) 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.
தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் சமூகத்தில் இதனை விட அதிகளவான தொற்றாளர்கள் காணப்படலாம் என்றும், எனவே பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேசமயம் சுகாதார பிரிவினர், மாவட்டத்தில் பெரும்பாலான பொது மக்கள் எவ்வித கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் தொற்று அதிகளவில் வேகமாக பரவி வருவதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார தரப்பு பொது மக்களை கேட்டுள்ளனர்.