• Thu. Apr 25th, 2024

இலங்கையில் வீடற்றவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Jan 11, 2022

இலங்கையில் வீடு அல்லது வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்குக் காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு ஒன்றை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது வீடு கட்டுவதிலுள்ள சிரமம் காரணமாக வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ‘சொந்துரு மல்ஹல் நிவச’ என்ற வீட்டுத்திட்டத்தை நடைமுறைப் படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவு விலையில் வீட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்த வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், பெருந்தோட்டத் துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு முற்கொடுப்பனவாக 5,00,000 ரூபா செலுத்தக் கூடிய வசதி இருக்க வேண்டும்.

அதேசமயம் வீட்டின் பெறுமதிக்கமைய மேலதிக பணத்தை வருடத்துக்குள் தவணை முறையில் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசியமானோருக்கு வங்கி மூலம் கடன் பணம் பெற்றுக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ரணபொகுணகம காணியில் 72 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.