• Tue. Oct 15th, 2024

கட்டாரில் நாடு திரும்ப காத்திருந்த இலங்கையர் சுட்டுக்கொலை

Jan 28, 2022

கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம்(26) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக டோஹா செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தின் மூலம், குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அங்குக் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த காவலாளி, அவரின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார்.

எனினும், அடையாள அட்டையைக் காண்பிக்க மறுத்தமையால், காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதன்போது காவலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கான இலங்கையைச் சேர்ந்த காவலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த மற்றுமொரு காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தப்பிச் சென்ற சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் இல்லாதது என்றும், அந்த துப்பாக்கியை அவர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த வளாகத்தின் குடியிருப்பாளர்களில் ஒருவரின் கூற்றுப்படி,

“இறந்த பாதுகாவலர் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைவதால் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப காத்திருந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளூர் சமூகம் தற்போது பணம் திரட்டி வருகிறது”.