• Sat. Nov 23rd, 2024

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் குறைவடைந்துள்ளது – பிரிட்டன்

Jul 27, 2021

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவடைந்துள்ளதாக பிரிட்டன் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரிட்டன் அதன் பயண ஆலோசனையில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரித்ததுடன், ஹோட்டல், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டினர் பார்வையிடும் இடங்கள் உட்பட தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.

இந் நிலையிலேயே இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு அல்லது குறைவடைந்து வருகிறது என்று பிரிட்டன் அதன் அண்மைய பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஈராக் மற்றும் சிரியாவில் மோதலால் தூண்டப்பட்ட குழுக்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து, இங்கிலாந்து நலன்களுக்கும் பிரிட்டிஷ் நாட்டினருக்கும் எதிராக உலகளவில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஏப்ரல் 21 அன்று, இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்கள் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாகின. இதனால் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

அது மாத்திரமின்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரிட்டன் மேலும் பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

குறிப்பாக கொழும்பில் இருந்து இரசாயனப் பொருள்களைக் கொண்டு வந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் கடற்கரைகளில் கரையொதுங்கும் அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையில் நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமைகள் மற்றும் நாடு முழுவதுமான டெங்கு காய்ச்சல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.