• Sun. Apr 21st, 2024

யூனிஸ் புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு!

Feb 19, 2022

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூனிஸ் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளுக்கான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டது. புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த புயலால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். லண்டனில் இரண்டு பேர், ஹாம்ப்ஷயரில் ஒருவர், நெதர்லாந்தில் 3 பேர், பெல்ஜியத்தில் ஒருவர், அயர்லாந்தில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.