• Fri. Nov 1st, 2024

எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கான் மக்கள்; புகைப்படம் சொல்லும் வேதனை சாட்சிகள்

Sep 13, 2021

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதஒ தொடர்ந்து அங்கிருந்து வெளியேற கடந்த 30 ஆம் திகதி வரை விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது உலக ஊடகங்களில் வெளியானது.

ஆனால், ஆப்கனை விட்டு வெளியேற அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் மக்கள் குறித்து செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி அம் மக்களின் வேதனையை ஆவணப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள சம்மன் எல்லையில் ஸ்பில் போல்டாக் பகுதியில் ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

அதேபோல், தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும், ஈரானை ஒட்டிய இஸ்லாம் காலா எல்லையிலும் ஆப்கன் மக்கள் தஞ்சம் கோரி காத்திருக்கின்றனர்.

இந்த குறிப்பிட்ட செயற்கைக் கோள் புகைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் அண்மையில் ஆப்கனுடனான சமான் எல்லையை மூடியது. ஆனால், எல்லை திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் உடைமைகளுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது அதிலிருந்தே ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறிவருகின்றனர்.

அமெரிக்கா மட்டும் 1,24,000 பேரை மீட்டது. இந்நிலையில், தலிபான்களின் கெடுபிடி நிறைந்த ஆட்சிக்குப் பயந்து இன்னமும் அங்கிருந்து மக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாடானது பாகிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டாலும் கூட அங்கு இன்னும் பொருளாதாரம் மீளவில்லை.

இதனால் அங்கு மக்கள் பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்னும் அமைச்சரகங்களின் அலுவலகங்கள் மூடியுள்ளன. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

இவற்றின் காரணமாகவும் தலிபான்கள் மீதுள்ள அச்சம் காரணமாகவும் அங்குள்ள மக்கள் நாட்டை விட்டுவெளியேறிவருகின்றனர்.