
அபுதாபியில் எரிபொருள் ஏற்றும் டிரக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை யேமனின் ஹெளத்திபோராளிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
முசாபா பகுதியில் எரிபொருள் டிரக்குகள் மூன்று வெடித்துச்சிதறியுள்ளன என தெரிவித்துள்ள அபுதாபி பொலிஸார் அபுதாபி விமானநிலையத்தில் கட்டுமானம் இடம்பெறும் பகுதிகளில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இரு இந்தியர்களும் பாக்கிஸ்தானை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சிறிய பறக்கும்பொருளொன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது- அனேகமாக அவை ஆளில்லா விமானங்களாக இருக்கலாம் அவை வெடித்து விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கவேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சிக்குழுவினரின் தகவல் அமைச்சு ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் ஆழமாக நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் அவர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்காக அவர்களிற்கு பாடம் புகட்டும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களிற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதகப்பலை யேமன் கடற்பகுதியில் வைத்து கைப்பற்றிய ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலில் இராணுவதளபாடங்கள் உள்ளதை காண்பித்திருந்தனர்.
எனினும் ஐக்கிய அரபுஇராச்சியம் அது சாதாரண சரக்குகப்பல் அதிலிருந்தவர்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.