உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத்தில், அரசின் முற்றுகையால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டினியாலும் உடல்நலக் குறைவாலும் பலியாகியுள்ளதாக அந்தப் பிராந்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் உணவுப் பற்றாக்குறையால் 350 சிறுவா்கள் உள்பட 1,500 பேர் உயிரிழந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அபை அகமது பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுக்கும் டிக்ரே மாகாணப் படையினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.
மத்திய அரசின் தடையையும் மீறி டிக்ரே மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த ஆண்டு நவம்பரில் டிக்ரே மாகாணத்துக்குள் நுழைந்த ராணுவம், தலைநகா் மிகேலியைக் கைப்பற்றியது.
இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். எனினும், டிக்ரே படையினா் எதிா்பாராத வகையில் மிகேலியை கடந்த ஆண்டு மீண்டும் கைப்பற்றினர். அதிலிருந்து, அந்தப் பிராந்தியத்துக்கான போக்குவரத்தை எத்தியோப்பிய அரசு முடக்கியுள்ளது.