• Tue. Dec 3rd, 2024

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு!

Dec 25, 2021

தென்கொரியாவில் கடந்த 2012-ம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார்.

இவருடைய நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இந்த ஊழலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடி பங்கு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு எதிராக நாட்டில் பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றம் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து அதிபர் பதவியை பறித்தது. அதன்பின் பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 22 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்தது. இதனைதொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மூன் ஜே இன் வெற்றி பெற்று அதிபரானார்.

இந்நிலையில் ஊழல் வழக்கில் சுமார் 5 வருடங்களாக ஜெயிலில் உள்ள முன்னாள் அதிபரான பார்க் கியுன் ஹைவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த கால பிளவுகளை மறந்து தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் பார்க் கியுன் ஹை உள்பட 3,094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் வருகிற 31-ந்தேதி ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தென்கொரிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.