• Thu. Mar 28th, 2024

சீனாவில் பெரும் வெள்ளம்; குழந்தையைக் காப்பாற்றிய பின் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

Jul 23, 2021

சீன வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய பின் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அந்தவகையில் வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் பணி வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் தாய் மற்றும் அவரது 4 மாதக் குழந்தையை கண்டறிந்த மீட்புப் பணி வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதன்போது மீட்புப் படையினரைக் கண்ட குழந்தையின் தாய் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை காப்பாற்றுவதற்காக மீட்புப் பணியாளர்களிடம் குழந்தையை தூக்கிவீசிய பின்னர் அந்த தாய் பரிதாபமாக பலியானார்.

தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக இடிபாடுகளுக்கு மத்தியில் போராடி வந்த தாய் குழந்தை காப்பாற்றப்பட்ட உடன் மரணித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.