• Sun. Feb 9th, 2025

ரஷியாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திய ஐ.பி.எம்

Mar 8, 2022

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. இதனால் ரஷியாவில் இந்த கார்டுகளை பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ரஷியா மற்றும் பெலாரசில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்தது. மேலும் ரஷியாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டோக் செயலி நிறுவனம் தெரிவித்தது. இதனையடுத்து ரஷியாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனமும் அறிவித்தது.

இந்நிலையில் ரஷியாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். (சர்வதேச வணிக இயந்திரங்கள்) அறிவித்துள்ளது. முன்னணி அமெரிக்க கணினி உற்பத்தியாளரான ஐ.பி.எம்., அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் சந்தையின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள ஆர்மோங்கில் உள்ளது.