• Mon. Sep 9th, 2024

பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் – இம்ரான் கான்

Dec 4, 2021

சியல்கோட் நகரில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இது நாடு வெட்கப்பட வேண்டிய நாள்“ என்றும், சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெறுவதுடன், அதனுடன் தொடர்புடைய சகலருக்கும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணைகள் தம்மால் நேரடியாக அவதானிக்கப்படுவதாகவும் விசாரணைகள் எந்த வகையிலும் தவறான செயற்பாட்டினை கொண்டிருக்காது எனவும் இம்ரான் கான் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசாரணை மற்றும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம், சம்பவம் தொடர்பாக இதுவரையில் 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய 10 குழுக்களை பொலிஸார் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.