கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார்.
வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள கிராமங்களில், மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகவும், 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் தலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.