• Tue. Sep 10th, 2024

ரஷ்ய படையில் இணையும் மகாராணியின் பாதுகாப்புப் படை வீரர்

Mar 9, 2022

பிரித்தானிய ராணியாருக்கான பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், தமது பொறுப்பில் இருந்து விலகி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய துருப்புகளுடன் இணைந்து போரிட புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் கோட்டையில் பணியாற்றிவந்த 19 வயதேயான அந்த இராணுவ வீரர் தமது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கிழக்கு ஐரோப்பாவிற்கு ஒரு வழி டிக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் சூழல் இருப்பதாக தெரிவித்துள்ள இராணுவ உயரதிகாரிகள், குறித்த இளைஞரை தொடர்பு கொண்டு, ரஷ்ய படையில் இணைவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குறித்த இளைஞர் களமிறங்கி, அவர் ரஷ்ய படைகளிடம் சிக்க நேர்ந்தால், பிரித்தானியாவும் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களமிறங்கியதாக ரஷ்யா கோர முடியும் என இராணுவ உயரதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

குறித்த இளைஞருடன் மேலும் மூன்று பிரித்தானிய இராணுவ வீரர்களும் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்றுள்ளதாக அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, இவர்கள் நால்வரல்ல மேலும் பல பிரித்தானிய வீரர்களும் உக்ரைன் ரஷ்ய போரில் பங்கேற்க சென்றிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை வெளியான உத்தியோகப்பூர்வ தகவலில், முன்னாள் பிரித்தானிய இராணுவத்தினர் சிலரே உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களமிறங்கியுள்ளனர். இதனிடையே, உக்ரைனுக்கு சென்றுள்ள அந்த இளம் வீரரை தொடர்பு கொள்ள பிரித்தானிய இராணுவ உயரதிகாரிகள், வெளிவிவகார அலுவலகம் மற்றும் பொலிசார் தீவிரமாக முயன்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த இளைஞரின் நண்பர்கள் வெளியிட்ட தகவலில், குறித்த இராணுவ வீரர் வார இறுதியில் போலந்துக்கு புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து உக்ரைன் எல்லையை கடக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், அவர் வெளியிட்ட சமுக ஊடக புகைப்படத்தில் இராணுவ காலணி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். இது, அவர் விளாடிமிர் புடினின் படையில் இணைந்திருப்பதை குறிப்பதாகவே அவரது நண்பர்கள் நம்புகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் குறித்த இராணுவ வீரரின் பெற்றோரும் அச்சம் காரணமாக கருத்து கூற மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இராணியாருக்கான பாதுகாப்புப் படையில் பணியாற்றுவது தமக்கு உடன்பாடில்லை எனவும், இராணுவ வீரர் என்றால் போர்க்களத்தில் போரிட வேண்டும் எனவும் அந்த வீரர் தமது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இதனிடையே, குறித்த வீரர் தன்னை பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளார் எனவும், எப்போதேனும் அவர் நாடு திரும்ப நேர்ந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி கோல்செஸ்டர் போன்ற இராணுவ சிறையில் அடைக்கப்படுவார் என முன்னாள பிரித்தானிய இராணுவ தளபதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.