• Mon. Dec 2nd, 2024

உக்ரைனைச் சுற்றி இராணுவக் கட்டமைப்பை உருவாக்கும் ரஷ்யா

Feb 17, 2022

உக்ரைனைச் சுற்றி ரஷ்யா தொடர்ந்து அதன் இராணுவ படைகளை குவித்துவருவதாக நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லைகளில் இருந்து படைகளை மீண்டும் அதன் நிரந்தர தளத்திற்கு திருப்பி அனுப்பி வருவதாகவும், உக்ரைன் உடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா செவ்வாய்க்கிழமை முதல் கூறிவருகிறது.

கிரிமியாவிலிருந்து டாங்கிகள், பீரங்கிகளை மற்றும் போர் ஆயுதங்களையும் ரயில் மூலம் வெளியேற்றப்படுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் ரஷ்யா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது.

ஆனால், இவை அனைத்துக்கும் நேர்மாறாக உக்ரைனைச் சுற்றி ஒரு பாரிய இராணுவக் கட்டமைப்பை உருவாக்க ரஷ்யா அதிக படைகளை அனுப்பிவருவதாக நேட்டோ புதன்கிழமை குற்றம் சாட்டியது.

அதேபோல், உக்ரைனின் எல்லைகளில் இருந்து தனது இராணுவப் படைகளை குறிப்பிடத்தக்க வகையில் ரஷ்யா திரும்பப் பெற்றதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா காணவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தனிப்பட்டமுறையில் ஒரு மூத்த மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி, ரஷ்ய இராணுவப் பயிற்சிகள் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆபத்து பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.