சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தளவாடங்களை மாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், நிலைமையை கணிசமாக மேம்படுத்தும் முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் ரஷியா மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷிய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெற்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையை ரஷிய படைகள் தகர்த்துள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ரஷியாவுடன் தொடர்ந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.