• Thu. Mar 28th, 2024

தென்கொரியாவில் இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!

Jul 28, 2021

தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த இலங்கைப் பிரஜையொருவர், தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் சந்தித்த தொழில்துறை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ‘த கொரியா டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

ஹுவாசோங் சியோபு பொலிஸ் நிலைய தகவல்களின்படி,

இலங்கையைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் ஹ்வாசோங் நகரத்தின் பால்டன் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் இறந்தார்.

அவர் எண்ணெய் அழுத்த அமுக்கியில் சிக்கியதன் விளைாவகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தின்போது அருகிலேயே வேறு இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர் அலறுவதைக் கேட்கும் வரை அவர்கள் விபத்து பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக நிலைமையை தொழிற்சாலையின் மேலாளரிடம் தெரிவித்தனர்.

சில எண்ணெய் அழுத்த வாயுவை வைத்திருந்த கம்ப்ரசர் திடீரென இயங்கத் தொடங்கியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு புதிய தொழிலாளி, அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் சேர்ந்தார்.

பாதிக்கப்பட்டவர் உட்பட – வெளி தேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கும் மேலாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

மேலும் அத்தொழிற்சாலை மேலாளர் விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு தொழிற்சாலையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

உற்பத்தியில் குறைபாடு காரணமாக, தொழிற்சாலை காலக்கெடுவை சந்திப்பதில் சிக்கல் இருப்பதால், தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறெனினும் தொழிலாளர் சட்டங்களில் ஏதேனும் மீறல்கள் இருந்தனவா என்பது குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

தொழிற்சாலையில் பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு காட்சிகளை பகுப்பாய்வு செய்வது உட்பட, விசாரணையின் பின்னர் எந்த வகையான முறைகேடுகள் காணப்படுகின்றன என்பதன் அடிப்படையில் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.