• Mon. May 29th, 2023

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் போர் மூளக்கூடும் – பிரித்தானியா

Nov 15, 2021

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார்.

டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஒருவருக்கொருவர் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது.

சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவர்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்சினை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் போர், இணையம் மூலம் தாக்குதல் போன்ற எதனையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.

பனிப் போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் ஓன்றியம் என்ற இருமுனைப் போர்ச் சூழல் நிலவியது. அதற்குப் பிறகு, அமெரிக்காவின் ஒருமுனை ஆதிக்கம் நிலவியது. ஆனால், தற்போது பல்வேறு நாடுகளும் தத்தமது நலன்களுக்காக களத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த பல்முனைப் போரை உலகம் எதிர்கொண்டுள்ளது.

அத்தகைய போரை தூதரக ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகள் போதிய அளவில் இல்லை. இதனால், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால், அது இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல்ககளை ஏற்படுத்தி போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்” என கூறினார்.