வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 8 மணி நேரம் திடீரென முடங்கியதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மன்னிப்பு கோரி இருக்கிறது.
நேற்று மாலையில் பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்த சமூக வலைத்தள முடக்கம் இரவிலும் தொடர்ந்ததால் பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ் அப் தனது டுவிட்டரில், “இன்று வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மெதுவாக மற்றும் கவனமாக வாட்ஸ்அப்பை மீண்டும் வேலை செய்யத் தொடங்கி உள்ளோம். பொறுமை காத்த உங்களுக்கு மிக்க நன்றி. எங்களிடம் மேலும் தகவல்கள் பகிரப்படும்போது நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம்” என்று அதில் பதிவிட்டுள்ளது.