• Tue. Dec 3rd, 2024

ஆஷஸ் 5 வது டெஸ்ட்: மழை காரணமாக ஆட்டம் தடை

Jan 15, 2022

இங்கிலாந்துடனான ஆஷஸ் 5 வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 5 வது டெஸ்ட் ஆட்டம் ஹோபார்டில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் அற்புதமாகப் பந்துவீசி சிறப்பான தொடக்கத்தை அணிக்குத் தந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (0), உஸ்மான் கவாஜா (2), ஸ்டீவ் ஸ்மித் (0) ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 12 ஒட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்து திணறியது.

இதை அடுத்து, மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஓவரை பயன்படுத்தி மார்னஸ் லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் நேர்மறையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி ஓட்டம் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், அவுஸ்திரேலியாவின் ஓட்டம் அதிகவேகமாக உயர்ந்தது. இது இங்கிலாந்து பெரும் சிக்கலை உண்டாக்கியது.

இங்கிலாந்து வசம் இருந்த ஆட்டத்தை அவுஸ்திரேலிய பக்கம் திருப்பிய இந்த இணை 4 வது விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், வித்தியாசமான முறையில் லபுஷேன் (53 பந்துகள் 44 ஓட்டங்கள்) போல்டானார்.

இதன்பிறகு, கேமரூன் க்ரீன் ஒத்துழைப்பு தர ஹெட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தையும் கடந்தார்.

பவுண்டரிகளாக விளாசிய ஹெட் 112 வது பந்தில் சதத்தை அடைந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்கவும் செய்தார்.

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடிய க்ரீன் அரைசதம் அடித்து 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

இதனால், 59.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 10 ஓட்டங்களுடனும், மிட்செல் ஸ்டார்க் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.