• Fri. Mar 29th, 2024

சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்; பாராட்டித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

Aug 9, 2021

ட்விட்டரில் இனவெறி கருத்தை வெளியீடு சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஒல்லி ராபின்சனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அஜித் அகர்கர் பாராட்டிப் பேசியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, கே.எல் ராகுல் 84 ரன்களும், ஜடேஜா 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன்பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 109 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 303 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி நாளான இன்றைய ஆட்டம் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டதால்,இரு அணிகள் இடையேயான முதல் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் அனுபவமே இல்லாத இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஒல்லி ராபின்சன் இந்திய அணியின் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, அனுபவமே இல்லாத இங்கிலாந்து அணியை சேர்ந்த ராபின்சன் இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது ஏனென்றால் அந்த நிலையில் பல இறுக்கமான இக்கட்டான நிலைகள் நிலவி வரும், அப்பொழுது சிறந்த முறையில் பந்து வீசுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று ராபின்சனை புகழ்ந்து கூறியுள்ளார்.

கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு இல்லாத நிலையில் ராபின்சன் இப்படி சிறப்பாக செயல்பட்டது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துவிட்டது.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்டு ஆகிய இருவரும் துவக்கத்தில் சரியாக பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.