• Mon. Mar 25th, 2024

யூரோ 2020 – இங்கிலாந்தை வென்றது இத்தாலி!

Jul 12, 2021

வெம்பிலியில் நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் சாம்பியன் கனவைத் தகர்த்த இத்தாலி பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரண்டாம் முறையாக இத்தாலி யூரோ சாம்பியனாகியுள்ளது. 1966- உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒரு பெரிய கோப்பையை வெல்லும் இங்கிலாந்தின் கனவும் இத்தனை போட்டிகளில் மேற்கொண்ட கடின உழைப்பும் வீணாகின. முழு நேர ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றும் 1-1 என்ற இழுபறியிலிருந்து மீள முடியாமல் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

இத்தாலியின் ஜெயண்ட் கோல் கீப்பர் கியான்லுகி டோனரூமா இங்கிலாந்து அடித்த 2 பெனால்டி ஷாட்களை தடுத்து விட்டார். இங்கிலாந்து ஸ்டரைக்கர்கள் ஜேடன் சாங்க்கோ, மற்றும் இந்தத் தொடர் முழுதும் வலது விங்கில் அற்புதமாக ஆடிய சாக்கா ஆகியோர் அடித்த ஷாட்க்ளை டோனரூமா தடுத்து விட்டார். மற்றொரு இங்கிலாந்து வீரர் மார்கஸ் ரேஷ்போர்டு போஸ்ட்டில் அடித்து வாய்ப்பை தவறவிட்டார்.

இத்தாலி அணியில் பிரெடெரிகோ பெர்னார்டேச்சி, லியானார்டோ போனுக்கி, டொமினிகோ பெரார்டி ஆகியோர் பெனால்டி ஷூட் அவுட்டில் வலைக்குள் செலுத்தினர்.

ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் இங்கிலாந்தின் லூக் ஷா கனவுத் தொடக்கத்தை அளித்தார். அவர் அடித்த பிரமாதமான ஷாட் கோலானது இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. முதல் பாதியில் இத்தாலியினால் கோலை திருப்பி அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தை உக்கிரப்படுத்தியது இத்தாலி,இதனையடுத்து 67வது நிமிடத்தில் போனுக்கி ஒரு கோலை அடித்து சமன் செய்தார். கூடுதல் நேரத்திலும் 1-1 இழுபறி முடியவில்லை என்பதால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

1976-ல் செக்கோஸ்லாவாகியா ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய பிறகு யூரோ கோப்பை இறுதி பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. 2000 மற்றும் 2012ம் ஆண்டு யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்விகளைச் சந்தித்த இத்தாலி இந்த முறை வெற்றியைக் கொண்டாடித் தீர்த்து விட்டது .

இங்கிலாந்தின் 67,000 ரசிகர்களும் ஏமாந்தனர்.

அபாரத் தொடக்கம்:

இங்கிலாந்து வெம்பிலியின் பதற்றமான ரசிகர்களை சாந்தப்படுத்த தொடக்கத்தில் அசத்தியது. ஹாரி கேன் பந்தை கெய்ரன் டிரிப்பியருக்கு அனுப்ப இவர் மிகப்பிரமாதமாக வளைந்து செல்லும் ஒரு கிராஸ் ஷாட்டை தூக்கி அடிக்க பந்து இறங்கியவுடன் லூக் ஷா கோலுக்குள் தள்ளினார். இது லூக் ஷாவின் முதல் சர்வதேச கோலாக அமைய வெம்பிலியே எழுந்து கொண்டாடியது.

ஆனால் 2018 உலகக்கோப்பை அரையிறுதியில் இப்படித்தான் குரேஷியாவுக்கு எதிராக 1-0 என்று முன்னிலை பெற்று பிறகு தோற்ற நினைவுகள் அந்த அணியை ஆட்டிப்படைக்காமல் இல்லை.

இத்தாலியின் பிரெடெரிகோ சீசாவின் துல்லியமான ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டு தடுத்தார், இங்கிலாந்தின் நன்று பயின்ற தடுப்பாட்டம் இத்தாலி முயற்சிகளை விரயமாக்கியது. ஹாஃப் டைமுக்கு சிறிது முன்பு கோலுக்கு அருகே போய் வீணான கடுப்பில் போனுக்கி 35 அடி தூரத்திலிருந்து அடித்த ஷாட் வெளியே சென்றது.

57 நிமிடங்கள் சென்று இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டுக்கு வேலை வந்தது. லாரென்சோ இன்சிக்னி ஷாட்டை தடுத்தார். பிறகு சீசேவின் கோல் நோக்கிய ஷாட்டை கையால் தள்ளினார். இத்தாலி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது. இதன் பலன் 67வது நிமிடத்தில் கிடைக்க ஆண்ட்ரியா பெலோட்டியின் தலையால் முட்டிய ஷாட்டை பிக்போர்டு போஸ்ட்டில் தள்ளி விட போனுக்கி வந்த பந்தை கோலாக மாற்ற சமன் ஆனது.

ஆட்டம் ட்ரா ஆக கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த முழு நேர ஆட்டம் ட்ரா ஆனது. பெனால்ட்டிக்குச் சென்றது அதில் இங்கிலாந்தின் இளம் வீரர்கள் சொதப்பினர் இத்தாலி 3-2 என்று வெற்றி பெற்று யூரோ சாம்பியன் ஆனது.