• Tue. Sep 10th, 2024

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 ; நாளை காலிறுதிச் சுற்று ஆரம்பம்

Jul 1, 2021

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிச் சுற்று நாளை ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதன்படி வேல்ஸ் அணியை 4க்கு 0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வென்றதுடன், இத்தாலி ஒஸ்ட்ரியாவை 2க்கு 1 என்ற கோல்கள் வீழ்த்தியிருந்தது.

அத்துடன் கால்பந்தாட்ட தரவரிசையில் 14 ஆவது இடத்திலுள்ள நெதர்லாந்து 43 ஆவது இடத்திலுள்ள செக் குடியரசிடம் 2க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, பலமிக்க இரண்டு அணிகளான பெல்ஜியம் மற்றும் போர்த்துக்கல் மோதிக்கொண்ட மற்றமொரு போட்டியில் பெல்ஜியம் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி காலிறுதிக்கு முன்னேறியது.

குரோஷியாவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் மாறி மாறி கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தன.

இப்போட்டியில் மேலதிக 30 நிமிடங்களுக்கு செல்வதற்கு முன்பதாக இரண்டு அணிகளும் தலா 3 கோல்களை போட்டியிருந்தன. எனினும், மேலதிக 30 நிமிடங்களில் ஸ்பெய்ன் அணி மேலதிகமாக 2 கோல்களைப் போட்டு இப்போட்டியில் 5க்கு3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

பிரான்ஸுக்கும் சுவிட்ஸர்லாந்துகம் இடையிலான போட்டியே இப்போட்டித் தொடரில் பெனாலட்டி முறை மூலமாக வெற்றியாளரை தீர்மானிக்கப்பட்ட முதல் போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியின் முழு நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தது. வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி சுவிட்ஸர்லாந்து அணி 5க்கு 4 என்ற கணக்கில் வெற்றியீட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டித் தொடரில் மிகவும் சுவாரஷ்யமிக்க போட்டியாக பலராலும் ரசிக்கப்பட்ட போட்டியாக இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஜேர்மனி அணியை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி அணிக்கான போட்டியில் சுவீட்ன மற்றும் உக்ரைன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், உக்ரைன் அணி சுவீடன் அணியை 2க்கு 1என்ற கோல் கணக்கில் வென்று கடைசி அணியாக காலிறுதிக்கு நுழைந்தது.

காலிறுதிச் சுற்றானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. வெள்ளியன்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியை ஸ்பெய்ன் அணி எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் இப்போட்டி முடிந்ததும் நள்ளிரவு 12.30 மணிக்கு இத்தாலி அணியை பெல்ஜியம் அணி எதிர்த்தாடவுள்ளது.